மூலிகை தோட்டம்
கோவையை சேர்ந்த திரு. சிவா அவர்களின் தோட்டம் வலைப்பதிவை படித்து பயங்கர பாதிப்பு ஏற்பட்டதன் விளைவாக நானும் கோவையில் உள்ள எங்களது 105 பட்டாலியன், அதிவிரைவு படை முகாம், வெள்ளலூரில் எங்களால் தீவிர முயற்சிகளுக்கு பிறகு வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட மூலிகை தோட்டத்தினை பற்றி எழுதலாம் என நினைத்து இந்த வலைப்பதிவை ஆரம்பத்திருக்கிறேன்......
இதில் நம்மால் மெது மெதுவாக மறக்கடிக்கப்பட்ட, மேலை நாடுகளின் தீவிர முயற்சியினால் வெற்றிகரமாக அப்புறப்படுத்த நமது பாரம்பரிய சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய இந்திய மூலிகை செடிகளை மீண்டும் ஞாபகப்படுத்துவதுதான் எங்களுடைய கமாண்டன்ட் திரு. பௌலி அவர்களின் மேற்கோளில் எனது மற்றும் எங்கள் வீரர்களின் ஒரு சின்ன முயற்சி.
நீங்கள் யார் வேண்டுமானாலும் எங்கள் தோட்டத்திற்கு வருகை புரியலாம். எங்களது தோட்டத்தில் வீறு கொண்டு நிற்கும் மருத்துவ வீரர்களை (செடிகளை) பார்வையிடலாம். உங்களுடைய வருகை எங்களுக்கு பெருமை, அதுவே எங்கள் நோக்கத்திற்கு கிடைத்த வெற்றி.
எங்களது மூலிகை தோட்டத்தில் இதுவரை மொத்தம் 270 வகை அறிய மூலிகை செடிகளை உருவாக்கியிருக்கிறோம். ஒவ்வொரு செடிக்கும் ஒரு அறிவிப்பு பலகை வைத்திருக்கிறோம். அதில் செடியின் பெயர் தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழியிலும் செடியின் தாவர பெயர், செடியின் மருத்துவ பயன்கள் போன்ற தகவல்களை தொகுத்திருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்த நமது இந்திய தேசத்தின் மூலிகை பொக்கிஷங்களை கொண்டு வர முயற்சி பண்ணுகிறோம். இன்னும் முயற்சி பண்ணி விரிவாக்க வேண்டும். மொத்தம் 4000 க்கும் மேற்பட்ட மூலிகை வகைகள் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே எங்கள் பணி இப்பொழுதுதான் ஒரு சிறிய அளவில் ஆரம்பத்திருப்பதாக உணர்கிறோம். காவல் பணி தான் எங்களுடய தலையாய பணி. அதற்கு இடையிலும் எங்களது அதிவிரைவுப்படை சமூகத்திற்கு பயனுள்ள பல நல்ல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
இதுவரை கோவை மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறோம். அந்த சமூக அக்கறையின் ஒரு தொடர்ச்சிதான் இந்த மூலிகை பயணமும்.
(வாசம் வீசும்....)